6.6.10

புதிய மொழி கற்றுக்கொள்ளலாம்..


எந்தவித முயற்சியும் இல்லாமலேயே ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?

இதை தான் சாத்தியமாக்குவதாக சொல்கிறது பாப்லிங் இணையதளம். யாதொரு பிரயத்தனமும் செய்யாமலேயே புதிய மொழியையோ (அ) புதிய செயலையோ கற்றுக்கொள்ளலாம் என்று ஆசை காட்டுகிறது இந்த தளம். “படிக்காமலேயே கற்பது’ என்று இதை வர்ணிக்கவும் செய்கிறது. படிக்காமலேயே கற்பதா அதெப்படி சாத்தியம்? இது மந்திரத்தால் மாங்காய் விழுவது போல் அல்லவா இருக்கிறது.

உண்மையில் முயற்சி செய்யாமல் எதுவும் சாத்தியம் இல்லை. படிக்காமல் கல்வியும் கை கூடாது. பாப்லிங் இணைய தளத்திலும் நீங்கள் முயற்சி செய்தாக வேண்டும். ஆனால் முயற்சிப்பது என்பது அயர்ச்சி தரக்கூடியதாக இல்லாமல் இயல்பானதாக அமைவதே பாப்லிங் தளத்தில் உள்ள சூட்சுமம். அதாவது உங்களை அறியாமலேயே நீங்கள் கற்க விரும்பும் விஷயத்தை பரிட்சயம் செய்து கொள்ள வழி செய்கிறதுது.

இதில் வியக்கவோ, குழம்பவோ அதைவிட முக்கியமாக சந்தேகிக்கவோ எதுவுமில்øலை. எல்லோருக்குள்ளும் இயல்பாக இருக்கும் சோம்பேறித்தனத்தை மனதில் வைத்துக் கொண்டு அதனை வெற்றி கொள்ளும் வகையில் இந்ததளம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னவோ எல்லோருக்கும் இருக்கவே செய்கிறது. அலுவல் நிமித்தமாக (அ) ஆர்வத்தின் காரணமாக புதியமொழியை கற்றுக்கொள்ள யாரும் முற்படலாம். இணையதளத்தில் இதற்கான வழிகளும் உண்டு.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் ஆரம்பத்தில் இருக்கக்கூடிய வேகமும், உற்சாகமும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்ல முடியாது. முதல் சில நாட்களுக்கு பிறகு அலுப்பே தோன்றலாம். ஏதோ சுமை போன்ற உணர்வு ஏற்படலாம். இந்த கட்டத்தை தாண்டுவதற்கு கொஞ்சம் சுய ஊக்கம் தேவை. அல்லது குதிரைக்கு முன் கேரட் காட்டப்படுவது போல ஒரு நிர்பந்தம் உந்தித்தள்ள வேண்டும். எத்தனை பேருக்கு இவை சாத்தியம் என்று தெரியவில்லை. பெரும்பாலானோருக்கு புதியது கற்கும் ஆர்வம், பழகிய சோம்பலால் பாழாகிப்போகும்.

இந்த சோம்பலை வெல்லும் வழியை தான் பாப்லிங் உள்ளடக்கி இருக்கிறது. இந்த தளத்தில் நீங்கள் மிக சுலபமாக புதிய மொழியை கற்றுக் கொள்ளலாம். புதிய செயல் (அ) ஆற்றலை பயின்று கொள்ளலாம். ஆனால் படிக்க மட்டும் வேண்டியதில்லை. அதனை பாப்லிங் பார்த்துக் கொள்ளும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உறுப்பினராகிவிட்டு அதன் பிறகு கற்பதற்கான மொழி (அ) செயலை தேர்வு செய்ய வேண்டியதுதான். தேர்வு செய்த பின் அதனை மறந்து விட்டு நீங்கள் பாட்டுக்கு “கம்ப்யூட்டர்’ முன் அமர்ந்து வேலையை பாருங்கள். நடுநடுவே கம்ப்யூட்டர் திரையில் சின்னப்பெட்டி தோன்றிக் கொண்டே இருக்கும். அந்த பெட்டியில் ஒரு கேள்விபதில் இருக்கும். அது புதிய மொழியின் வார்த்தையாகவோ, புதிய செயலின் சிறு அங்கமாகவோ இருக்கும். வேலை நேரம் முழுவதும் இப்படி சின்னச்சின்ன பெட்டி தோன்றி மறைந்து கொண்டிருக்கும். வேலை பார்த்துக் கொண்டே அந்த பெட்டியையும் கவனித்துக் கொள்ளலாம். ஒரு சில நாட்களில் கொஞ்சம் வார்த்தைகளையும் கற்றுக் கொண்டு விடலாம். யாரும் தார்குச்சி போடாமலேயே நாமும் தனியே பிரயத்தனம் செய்யாமல் மிக இயல்பாக கற்றுக் கொள்வதற்கான எளிமையான வழி இது.

பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன் உட்பட பல மொழிகளுக்கும் வேறு பல செயல்களுக்கும் இப்படி பாப்லிங்கள் இருக்கின்றன. ஆக மொத்தம் 150 தலைப்புகள் இருப்பதாக இந்த தளம் தெரிவிக்கிறது. உங்களுக்கு எது தேவையோ தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் விருப்பப்பட்டால் உங்களுக்கான பாப்லிங் பெட்டிகளை நீங்களே உருவாக்கி கொள்ளவும் முடியும். கம்ப்யூட்டரில் செயல்படக்கூடிய செயலியாக அல்லது பயர்பாக்ஸ் பிரவுசரின் விரிவாக்கமாக இதனை டவுண்லோடு செய்து கொள்ளலாம். கொஞ்சம் சுவாரசியமான தளம் தான் இல்லையா?

இந்த தளத்தை உரிமையாளர் “பாப்லிங்’ உருவான விதத்தை விபரிப்பதும் சுவாரஸ்யமாகவே உள்ளது. சோம்பேறி ராஜாக்கள் பலர் எதுவும் செய்யாமலேயே ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும் புத்திசாலித்தனத்தை பெற்றிருப்பதாகவும் இதுவே பாப்லிங் பிறப்பிப்பதற்கான மூல விதை என்றும் சொல்கிறார். அத்தகைய சோம்பேறிகளின் ஒருவரான தானும், ஸ்பானிஷ் மொழியை கற்க விரும்பிய போது ஆயிரக்கணக்கான ஸ்பானிஷ் சொற்களை சுலபமாக தெரிந்து கொண்டு விட்டால் எப்படி இருக்கும் என கற்பனையில் ஆழ்ந்து விட்டாராம். கற்பனைக்கான வழியை தேடிக் கொண்டிருந்த போது தன் நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கிறோமோ, அதில் அவ்வப்போது பிளாஷ் கார்டு தோன்றிக் கொண்டே இருந்தால் அதிக முயற்சியே இல்லாமல் ஸ்பானிஷ் மொழி சொற்களை கற்றுக்கொண்டு விடலாம் என்று தோன்றியிருக்கிறது.

இந்த எண்ணம் உதித்த பிறகு காதலியோடு மெக்சிகோ சென்று வந்தவர் அங்கு ஸ்பானிஷ் சொற்களை கேட்ட உற்சாகத்தில் புதிய மொழி உட்பட எந்த ஒரு விஷயத்தையும் பாப்அப் பெட்டிகளில் கற்பதற்கான பாப்லிங் இணைய தளத்தை உருவாக்கி விட்டார். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

ஆனால் புதிய மொழியை கரைத்து குடித்து விடலாம் என்று எல்லாம் கனவு காணாதீர்கள். அந்த மொழி பேசும் ஊருக்கு சென்றால் நலம் விசாரித்து வழி கேட்கும் அளவுக்கு தேர்ச்சி பெறலாம்.
http://www.popling.net/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக